24-3-22/13.53pm
ஆந்திரா : சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுவன் காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்திருந்தான். சீருடையோடும் ஸ்கூல் பேக்கோடும் வந்த சிறுவன் காவல் ஆய்வாளரை கேள்வியால் துளைத்தெடுத்தான். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
சித்தூர் மாவட்டம் பலமானார் பகுதி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் என்.பாஸ்கர். வியாழன்று அவரது காவல்நிலையத்திற்குள் நுழைந்த ukg பயிலும் ஆறுவயது சிறுவன் புகாரளித்தான். மேலும் கையோடு கிளம்பி வருமாறு கோரிக்கையெழுப்பினான். கார்த்திக் என்ற அந்த சிறுவன் ஸ்டேஷனுக்குள் நுழைந்து நேரிடையாக காவல் ஆய்வாளர் அறைக்கு சென்றான்.

அங்கிருந்த ஆய்வாளரிடம் தான் பயிலும் ஆதரஸா பள்ளிக்கு செல்லும் வழியில் டிராக்டர்கள் நிற்பதாகவும் அவை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதால் தானும் தனது நண்பர்களும் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்தான். கையோடு கிளம்பி வந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்யுமாறு அழைத்தான். இதைக்கண்ட காவலர்கள் அவனை வெகுவாக பாராட்டி இனிப்புகளை வழங்கினர்.

உடனடியாக போக்குவரத்து காவலர்களை அழைத்த காவல் ஆய்வாளர் பாஸ்கர் கார்த்திக்கின் ஆணைக்கிணங்க போக்குவரத்தை உடனடியாக சரிசெய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் அந்த பள்ளியருகில் பாதாளசாக்கடை பணிநடைபெறுவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டு விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். சிறுவனின் தன்னம்பிக்கையை காவலர்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த காவலர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அதையடுத்து சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
….உங்கள் பீமா