Friday, June 9, 2023
Home > ஆன்மிகம் > மீட்கப்பட்ட 500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம்…! தஞ்சாவூரில் பரபரப்பு..!

மீட்கப்பட்ட 500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம்…! தஞ்சாவூரில் பரபரப்பு..!

31-12-21/16.39pm

தஞ்சாவூர் : 500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் தஞ்சாவூரில் மீட்கப்பட்டது. இந்த மரகதலிங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

தஞ்சாவூரில் உள்ள ஒரு வீட்டில் மிகப்பழமையான விலைமதிப்பற்ற கோவில் சிலைகள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக சிலைதிருட்டு தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் அசோக் நடராஜன் ஆகியோரின் தலைமையில், காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன் பாலச்சந்தர் மற்றும் போலீசார், தஞ்சாவூரில் உள்ள அருளானந்த நகர், 7 ஆவது குறுக்கு தெருவில் உள்ள அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த வீட்டில் இருந்த அருண் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தையான சாமியப்பா என்பவரிடம் பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும் அது வங்கி லாக்கரில் இருப்பதையும் ஒப்புக் கொண்டார்.

`

அதையடுத்து வங்கியிலிருந்த பச்சை மரகதலிங்கத்தை மீட்ட போலிசார் அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கைப்பற்றப்பட்ட பச்சை மரகதலிங்கம் எட்டு செ.மீ உயரமும் 530 கிராம் எடையும் கொண்டதாக உள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

……உங்கள் பீமா
.