சண்டிகர் : சில மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் காங்கிரஸ் கட்சி மறுசீரமைக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ராகுல்காந்தியும் சொன்ன மறுநாளே பஞ்சாப் குஜராத் மற்றும் சில மாநிலங்களில் இருந்து பல முக்கிய தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகியதுடன் பிஜேபியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அஸ்ஸாமில் சில முக்கிய தலைவர்களும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தலைமையில் தங்களை பிஜேபியில் இணைத்துக்கொண்டனர். இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் பிஜேபிக்கு வாக்களித்ததாக நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டுமுறை எம்பியாகவும் இருந்த குல்தீப் பின்ஷாய் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மனைவி ரேணுகாவுடன் குல்தீப் பின்ஷாய் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் டெல்லி தலைமை அலுவலகத்தில் பிஜேபியில் இணைந்தார். இந்த இணைப்பிற்குப்பிறகு செய்தியாளர்களை சந்தித்த குல்தீப் பின்ஷாய்,
” நரேந்திர மோடி அவர்கள் எப்போதுமே ஒரு சிறந்த பிரதமர். அவர் தேசத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி ஏழைகளின் நலன் மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். பிரதமரின் தொலைநோக்கு பார்வை மற்றும் அவரது கொள்கை மிகுந்த பாராட்டுக்குரியது. அதேபோல மனோகர் லால் கட்டார் எட்டாண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக உள்ளார்.
அப்படி இருந்தபோதிலும் லால் கட்டார் ஒரு கரையற்ற நற்பெயரை கொண்டுள்ளார்” என செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார். மேலும் ஹிஸாரில் அமைந்துள்ள அடம்பூரை பிரதிநிதித்துவப்படுத்திய குல்தீப் பின்ஷாய்ராஜினாமா செய்ததால் அடுத்த ஆறுமாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தொகுதியில் குல்தீப் பின்ஷாய் மகனான பாவ்யா பின்ஷாய் பிஜேபி வேட்பாளராக போட்டியிடலாம் என கூறப்படுகிறது.