புதுடில்லி : மேற்குவங்க முதல்வரின் மூன்று நாள் டில்லி பயணம் அரசியல் விமர்சகர்களை உற்றுநோக்க வைத்துள்ளது. மேற்குவங்க மாநில அமைச்சரான பார்த்தா சட்டர்ஜியின் கைதுக்கு பிறகு முதல்வர் மமதாவின் டெல்லி பயணம் திடீரென முடிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாள் அரசியல் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மமதா இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாநில அரசிற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை 17996 கோடி நிதியை வழங்க வலியுறுத்தி கடிதம் வழங்கியதாக செய்தியாளர்கள் சந்திப்பில் மமதா தெரிவித்துள்ளார். மேலும் ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை வழங்ககோரியும் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசு மேற்குவங்க மாநிலத்திடம் மட்டும் மாற்றாந்தாய் மனநிலையோடு நடப்பதாக திரிணமூல் காங்கிரஸ் அடிக்கடி குற்றசாட்டு கூறிவந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் மமதாவிடம் கேள்வியெழுப்பினர். ஆனால் மமதா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
மேலும் இந்த அவசர சந்திப்பு மமதாவிற்கு மிக நெருக்கமான சட்டர்ஜியை விடுவிப்பது குறித்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் சுஷாந்த் சிங் மர்ம மரண வழக்கில் சிவசேனா முக்கிய புள்ளிகள் சிக்கிய நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களுக்கு உதவியதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருந்தன.
மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் மீதான வழக்குகளில் கைதுநெருக்கடி உருவான சூழலில் பிரதமர் மோடியை சந்தித்தபின்னர் கைதிலிருந்து தப்பித்தார் என பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல தற்போது பார்த்தா சட்டர்ஜி கைதான சூழலில் மமதா பிரதமர் மோடி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.