26-12-21/20.33pm
விளாத்திகுளம் : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புறவழிச்சாலையில் தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கியது.
விழுப்புரத்தில் இருந்து 35 பெண் பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா செல்லவேண்டி தனியார் பேருந்து ஒன்றில் டிசம்பர் 23ம் தேதி கிளம்பினர். மேல்மருவத்தூர் ராமேஸ்வரம் மதுரை ஆகிய இடங்களில் உள்ள புனித தலங்களை தரிசித்துவிட்டு தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரையில் அமைந்துள்ள வெக்காளி அம்மனை தரிசிக்க சென்று கொண்டிருந்தனர்.
பேருந்து குமாரசக்கணபுரம் கிராமம் அருகே வந்துகொண்டிருந்தபோது பேருந்தின் ஸ்டியரிங் திடீரென லாக் ஆனதாக தெரிகிறது. அதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் இடதுபுறமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த பெண்கள் சத்தம் போட்டு அலற புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களில் வந்தவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவ உதவிக்குழு அனைத்து பெண் பக்தர்களையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதனால் மதுரை தூத்துக்குடி புறவழிச்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
…..உங்கள் பீமா