இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவகுமார் என்பவரின் மகன் தனுஷ். தனுஷ் கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வில் பங்குபெற்று தேர்வாகாமல் இந்த வருடம் நீட் தேர்வு ரத்தாகிவிடும் என நம்பிக்கையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வருடம் நீட் தேர்வு நடக்காது என உறுதி அளித்த திமுக அரசு, சில நாட்கள் முன்பு தேர்வுக்கு மாணவர்களை தயாராக சொல்லியது.
இந்நிலையில் இன்று நடக்கவிருந்த நீட் தேர்வில் பங்கு கொள்ள தயாராக வேண்டிய நிலையில் அதிகாலை மூன்று மணி அளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.
இது குறித்து தமிழக பிஜேபி தலைவர் கே அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் “ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும் உச்சநீதிமன்றம் பாராட்டும் NEET தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை அறிவாலயம் நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு.” என பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி கே பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?
நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா?
நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.
அதற்கு சரியான பதிலைக் கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்
19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”. என பதிவிட்டுள்ளார்.
மேலும் சமூக தளத்தில் உதாரு விட்ட உதய் என்றும் நீட் தேர்வு ரத்து என்னாச்சு எனவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. திமுக நாளை நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ” நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசுகள் எதுவும் நடவடிக்கைகள் எடுக்க முடியாது என தெரிந்தும் திமுக மக்கள் மனதில் பொய்யான தகவலை பதியவைக்க பார்க்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது” என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
..உங்கள் பீமா