புதுதில்லி : மத்திய அரசால் ஆயுதப்படைகளில் சீர்திருத்தம் செய்யும் வகையில் பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டம் பலரது வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து வன்முறையை தூண்டிவருவதாக ஆளும்கட்சி விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ANI செய்திநிறுவனத்திற்கு அக்னிபாத் குறித்து பிரத்தியேக பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது ” ஒட்டுமொத்த போரும் ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. நாம் தொடர்பே இல்லாத போர்களை நோக்கி செல்கிறோம். கண்ணுக்கே தெரியாத எதிரிகளுக்கு எதிரான போரை நோக்கி பயன்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த சீர்திருத்தம் மிக அவசியமானது.
தொழில்நுட்பம் நாளுக்குநாள் அதிவிரைவாக செல்கிறது. நாளைக்காக நாம் தயாராக வேண்டும். நாம் மாறவேண்டும். எதிர்கால போருக்கு நாடு தயாராக விரும்பினால் ஆயுதப்படைகளில் இந்த மாற்றம் அவசியம். இந்த அக்னிபாத் திட்டம் பாதுகாப்பான மற்றும் வலுவான இந்தியாவிற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்குப்பார்வையின் ஒருபகுதியாகும்.
இது ஒரு தனிப்பட்ட திட்டம் அல்ல. 2014ல் மோடி ஆட்சியில் அமர்ந்தபோது அவரது முன்னுரிமைகளில் ஒன்று இந்தியாவை எவ்வாறு பாதுகாப்பாகவும் வலிமையாகவும் மாற்றுவது என்பது தான். அதற்க்கு பல வழிகள் பலபடிகள் தேவைப்பட்டன. இந்த திட்டத்தை திரும்ப பெறுவோமா என்ற கேள்விக்கே இடமில்லை. நமது ராணுவத்தின் பாரம்பரிய ரெஜிமென்ட் கலைக்கப்படுகிறது என வதந்திகள் பரவி வருகின்றன.
ரெஜிமெண்ட்டுகளை பொறுத்தவரையில் நாம் இரண்டு விஷயங்களை புரிந்துகொள்ளவேண்டும். ரெஜிமென்டுகள் யார் கருத்துக்கும் தலையாட்டுவதில்லை. அவை தொடரும். ரெஜிமென்ட் முறை முடிவுக்கு வருகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை” என பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
