புதுதில்லி : ஆயுதப்படைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும் நாட்டிற்காக சேவை செய்ய துடிக்கும் துடிப்பான இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கவும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசால் அக்னிபாத் எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு ஆட்சேர்க்கைக்கான முதல் அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வழக்கம்போல காங்கிரஸ் இந்த திட்டத்தையும் எதிர்ப்பது மட்டுமல்லாமல் அதன் மாணவர் அமைப்புகள் மூலம் வன்முறையை தூண்டிவருவதாக பிஜேபி விமர்சித்துவருகிறது. மேலும் காங்கிரஸ் மனவர் அமைப்பை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் வன்முறையை தூண்டியதாக இருதினங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டார். மேலும் பல அரசியல்கட்சியை சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரசார் டெல்லியில் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்ட சுபாத் சஹேனி ” ஜெர்மன் நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்தவர் ஹிட்லர். யூத இனப்படுகொலையை நிகழ்த்தியவர். அவரை போன்ற சர்வாதிகார மனப்போக்கு கொண்டவர் மோடி. அவர் ஹிட்லரைப்போல செயல்படும் மனநிலையை மாற்றாவிட்டால் ஹிட்லரை போலவே மரணமடைவார்” என கூறினார்.
அவரின் இந்த கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து ANI செய்திநிறுவனத்திடம் பேசிய அவர் “நரேந்திர மோடியே கூறியிருக்கிறார். ஹிட்லரை பின்தொடர்பவர்கள் ஹிட்லரை போலவே மரணமடைவார்கள் என. நீங்கள் நரேந்திர மோடியிடமே கேளுங்கள். அவரும் இதே முழக்கத்தை எழுப்பியுள்ளார். அவர் என்ன பாதையில் செல்கிறார் என அவரிடமே கேளுங்கள்” என தெரிவித்தார்.
இந்த போராட்டங்கள் எல்லாம் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனின் பேரில் ராகுல்காந்தி ஆஜராவதை தொடர்ந்து ஏற்பட்டுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது. இன்றுடன் (திங்கட்கிழமை) நான்காவது நாளாக ராகுல் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேஷனல் ஹெரால்ட் முறையற்ற பணப்பரிவர்த்தனை மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கில் ராகுல் மற்றும் சோனியா ஆகியோர் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
