15-12-21/11.00am
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். கடந்த நாட்களுக்கு முன்னர் போலீஸ் நடத்திய வாகன சோதனையின்போது தனது நண்பருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் மணிகண்டனை மடக்கி பிடித்தனர். அதன்பின்னர் விசாரணைக்கு கீழத்தூவல் காவல்நிலையம் அழைத்து சென்றனர். மாலை ஆறுமணி அளவில் மணிகண்டன் வீட்டாரை தொடர்பு கொண்ட காவல்துறை மாணவரை அழைத்து செல்ல அறிவுறுத்தியிருக்கிறது. வீடு திரும்பிய மணிகண்டன் காவல்நிலையத்திலிருந்து கிளம்பியபோதே நடக்க முடியாத அளவிற்கு மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
வீட்டில் மூன்று முறை ரத்தவாந்தி எடுத்த மணிகண்டன் உறக்கத்திலேயே உயிரை விட்டுவிட்டார். காவல்துறையினர் தாக்கியதாலேயே மணிகண்டன் உயிரிழந்துவிட்டான் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிஜேபி நாம் தமிழர் மற்றும் முக்குலத்தோர் அமைப்பு என பல கட்சிகள் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை உண்மைகண்டறியும் குழு ஒன்றை அமைத்திருந்தார். இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக ஏடிஜிபி தாமரைக்கண்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ” மணிகண்டன் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்தார் என கூறுவதில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. விஷம் அருந்தியே மணிகண்டன் தற்கொலை செய்துள்ளான்” என கூறினார்.
காவல்துறையின் இந்த கருத்துக்கு பல்வேறு மாணவ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
….உங்கள் பீமா