19-11-21/6.50am
ராஜஸ்தான்: ஜேசிபி வாகனத்தில் பெண்ணை தள்ளிவிட்டு கொன்றதாக கான்ஸ்டபிள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பூண்டி மாவட்டம் தலோரா காவல் எல்லைக்குட்பட்ட அக்டாசா கிராம பகுதியில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அக்டாசாகிராமத்தில் உள்ள ஜலோடா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை தகர்க்கப்போவதாக கூறி மாவட்ட நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் மற்றும் காவல்துறையுடன் சம்பவ இடத்திற்கு வந்தது.
அப்போது அங்கிருந்த தனது வீட்டை இடிக்க மறுப்பு தெரிவித்து சமேலிபாய் மாலவ் (52) என்பவர் அதிகாரிகளை தடுத்து நிறுத்த முற்பட்டார். அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை நிலத்தில் இறக்கி இடித்து தள்ள ஆரம்பித்தனர். அதைக்கண்ட சமேலி தடுக்க முற்பட்டபோது அவரை அருகிலிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் ஜேசிபி வாகனத்தில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
அதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷமிட்ட ஆரம்பித்தனர். மேலும் தலரோவில் உள்ள சமூகநீதி மையத்துக்கு எதிரில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பிவருகின்றனர்.
கடந்த புதன் கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தின்போது காவல்துறை உயர் அதிகாரிகள் இருந்ததாக கூறப்படுகிறது. பூண்டி எஸ்பி சிவராஜ் மீனா கூறுகையில் பிரச்சினை சுமூகமாக முடிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என கூறினார். இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு கண்டன அறிக்கையும் காங்கிரஸ் சார்பில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஆட்சியில் இது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
….உங்கள் பீமா