18-12-21/ 13.19pm
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள பிரபல பாக்ஸ்கான் செல்போன் உற்பத்தி தொழிற்சாலை பெண்கள் தங்குவதற்கு தனியாக ஒரு விடுதி ஒன்றை அமைத்துள்ளது. அங்கு தங்கியுள்ள பெண்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
பாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்கள் தங்கும் விடுதியில் கடந்த புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தியெடுத்து மயங்கியுள்ளனர்.

அதையடுத்து அந்த ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்று இரவு வழங்கப்பட்ட உணவு தரமற்ற நிலையில் இருந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சில பெண்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். தரமற்ற உணவை உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறிய பெண்கள் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. மேலும் சக ஊழியர்களாக கஸ்தூரி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் காணாமல் போனதாக பதட்டம் நிலவியது.
அதையடுத்து நள்ளிரவில் பாதிக்கப்பட்ட மற்றும் ஊழியர்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விடுதி நிர்வாகத்திற்கு எதிராகவும் நிறுவனத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் சமரச முயற்சியில் இறங்கினர். அதில் சமரசம் எட்டாத நிலையில் மாவட்ட ஆட்சியர் போனில் பேசினார்.

வீடியோ காலில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஐஸ்வர்யா மற்றும் கஸ்தூரி இருவரும் சிகிச்சை முடிந்து பத்திரமாக திரும்பிவிட்டதாக தெரிவித்தார். மேலும் விடுதி வார்டன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் விடுதிகளில் அடைப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்த சொல்லியிருப்பதாகவும் கூறினார். இதை ஏற்றுக் கொள்ள மறுத்த பெண் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த நிறுவனத்தின் விடுதி கண்காணிப்பு பொறுப்பை ஏற்று நடத்துவது முக்கியமான திராவிட கட்சியை சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா