Saturday, July 27, 2024
Home > ஆன்மிகம் > கோவில் நிலத்தில் மீன் சந்தை..! இந்து சமய அறநிலைத்துறை அட்டூழியம்..?

கோவில் நிலத்தில் மீன் சந்தை..! இந்து சமய அறநிலைத்துறை அட்டூழியம்..?

28-12-21/15.41pm

சென்னை : தமிழகத்தில் உள்ள இந்துக்களின் கோவில்களில் வரும் உண்டியல் நிதி மற்றும் நஞ்சை புஞ்சை மற்றும் அசையும் அசையா சொத்துக்களின் வருமானத்தை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.

பல கோவில்களின் வருமானத்தை பொது சேம நிதிக்கென மாநில அரசு எடுத்துக்கொள்கிறது. மேலும் உள்ள வருமானங்கள் அரசு கருவூலத்திற்கும் கோவில்களின் புனரமைப்புக்கும் செலவிடப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சென்னை பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோவில் ஒன்றின் நிலத்தில் மீன் சந்தை அமைக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொசப்பேட்டை என அழைக்கப்படும் குயப்பேட்டையில் பல வருடங்கள் பழைமையான அருள்மிகு கந்தசுவாமி மற்றும் ஆதிமொட்டையம்மன் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு தினமும் வெளியூரிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதில் புதிய மீன் சந்தை நிர்மாணிக்க அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`

இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” 2021-2022 சட்டமன்ற அறிக்கை எண் 93ன் படி சென்னை குய்யப்பேட்டை அருள்மிகு கந்தசுவாமி மற்றும் ஆதிமொட்டையம்மன் திருக்கோவில் அருகில் உள்ள பழைய சந்தை கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய மீன் சந்தை காட்டும் பணியை ஆரம்பிக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்படுகிறது.

இந்த பணிக்கு திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில் மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவில் ஆகிய மூன்று கோவில்கள் மூலம் 1.55 கோடி நிதி கடனாக பெறப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

```
```

“இந்து கோவில்களின் நிதியின் மூலம் இந்து கோவில்களின் நிலத்தில் இறைச்சிக்கான சந்தையை எழுப்ப போவது எந்த விதத்தில் நியாயம். கோவில்களின் ஆகம விதிகளை அறநிலைத்துறை மீறுகிறது. எங்களின் பக்தி உணர்வை கொச்சைப்படுத்துவதுடன் இறை நம்பிக்கையையும் அறநிலையத்துறை எள்ளி நகையாடுகிறது. தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” கொசப்பேட்டை பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா