Sunday, April 19, 2026
Home > அரசியல் > மோசடி வழக்கு..! முதல்வரின் வாரிசு மீது எப்.ஐ.ஆர்..!

மோசடி வழக்கு..! முதல்வரின் வாரிசு மீது எப்.ஐ.ஆர்..!

21-3-22/14.47pm

ராஜஸ்தான் : ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலில் ஏறியதிலிருந்து ஊழல் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

நிலக்கரி ஊழல் கனிமவள ஊழல் மற்றும் ரீட் தேர்வு ஊழல் என ராஜஸ்தானே பரபரப்புக்குள்ளாகியிருக்கும் வேளையில் முதல்வர் அசோக்கின் மகன் வைபவ் கெலாட் மீது வழக்கு பதிவாகியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் வைபவ் நாசிக் பகுதியில் இருக்கும் ஒருவரிடம் பலகோடிகள் மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

சுஷீல் பாட்டில் என்பவர் நாசிக் காவல்நிலையத்தில் புகாரளித்ததோடு தனது உயிருக்கு பாதுகாப்பு கோரியும் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரில் ” சச்சின் வலெரா என்பவர் வைபவுக்கு நெருக்கமானவர் என கூறிக்கொண்டு என்னிடம் அறிமுகமானார். மாநில அரசுடன் ஒப்பந்தம் வாங்கித்தருவதாக கூறி 6.80கோடிகள் பெற்றுக்கொண்டார்.

அரசு ஒப்பந்தங்களை கையாளும் ஒரு தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக சேர அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவைத்தார். எனது முதலீட்டின் மீதான பணம் திரும்ப வரவில்லை. அதைக்குறித்து கேள்வி கேட்டேன். அதன்பிறகு வைபவுடன் வீடியோ கான்பரசிங்கில் பேசவைத்தனர். அவர் வெகுவிரைவில் முதலீட்டை திரும்ப தருவதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை முதலீட்டை திரும்ப தரவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உயர் அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பதால் என் உயிருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என அஞ்சுகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த குற்றசாட்டுகளை வைபவ் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

….உங்கள் பீமா