15-12-21/13.41pm
சென்னை : எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த பரந்தாமன். இவர் பெட்டிக்கடை வைத்திருப்பவர்களிடம் ஐந்து லட்சம் கப்பம் கேட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று சமூகத்தொண்டாற்றியவர் பரந்தாமன். இதனால் மக்களிடம் செல்வாக்கு அதிகரித்து வாக்காக அறுவடையானது. அதையடுத்து எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார் பரந்தாமன். ஆனால் தற்போது தனது சுயரூபத்தை வெளிக்காட்ட ஆரம்பித்திருப்பதாக வாக்கு செலுத்தி வறண்டு போன எழும்பூர் தொகுதி மக்கள் விமர்சிக்கின்றனர்.

எழும்பூர் ரயில்நிலையம் மற்றும் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட ரோட்டோர பெட்டிக்கடைகள் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் பெட்டிக்கடைகள் அதாவது பங்க் கடைகள் உள்ளீடற்றவற்றில் வசூல் வேட்டை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சாகுல் என்பவர் கூறுகையில் ” நானும் எனது தந்தையும் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகில் பங்க் கடை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

இதுவரை எந்த கட்சியினரும் இடைஞ்சல் செய்ததில்லை. ஆனால் தற்போது திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் ரபீக் கடைக்காரர்களை அழைத்து கூட்டம் நடத்தினர். அதில் ஒவ்வொரு கடை உரிமையாளரும் ஐந்து லட்சம் தரவேண்டும். அப்படி கொடுக்க தவறினால் கடை நடத்த முடியாது என மிரட்டுகின்றனர. இது குறித்து எம்.எல்.ஏ.பரந்தாமனிடம் முறையிட்டோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. எங்களால் முடிந்த அளவிற்கு பணம் திரட்டி கொடுத்துவிட்டோம்.
பணம் கொடுக்காதவர்கள் கடைக்கு எதிரே பரந்தாமன் புதிய கடைகளை இறக்கி வைத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவிற்கும் மனு அளித்துள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை” என குறிப்பிட்டார். மேலும் பரந்தாமன் பெயரை குறிப்பிட்டு திமுக பிரமுகர் ரமேஷ் என்பவர் பணம் கொடுக்காத கடைக்காரர்களை மிரட்டும் ஆடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த கேள்விகளுக்கு பரந்தாமன் பதிலளிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது.
….உங்கள் பீமா