17-12-21/15.40pm
நெல்லை : நெல்லையில் பள்ளி கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் பலியாகியுள்ளனர். நான்கு மாணவர்கள் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் சர்ச் ஆப் சவுத் இந்தியா திருநெல்வேலி டயோசீஸ் சார்ந்த சாப்ட்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதற்க்கு அரசு நிதி உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 11 மணியளவில் பள்ளி இடைவேளையின்போது மாணவர்கள் கழிவறை பக்கம் சிறுநீர் கழிக்க சென்றிருக்கின்றனர்.

அப்போது திடீரென கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அந்த இடிபாடுகளில் சிக்கி இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நான்கு பேர் அவசர சிகிச்சைப்பிரிவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இறந்த மாணவர்களின் விபரத்தை பள்ளிநிர்வாகம் வெளியிட்டுள்ளது. பாட்டப்பத்து டவுன் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் அன்பழகன். தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் விஸ்வரஞ்சன் மற்றும் பழவூர் பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் அபு பக்கர் சித்திக், சஞ்சய், அப்துல்லா மற்றும் இசக்கி பிரகாஷ் ஆகிய மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.




இந்நிலையில் பள்ளியில் நிர்வாக குளறுபடிகளால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் மரணத்தால் அந்த இடமே போர்க்களமாய் காட்சியளிக்கிறது. எங்கு திரும்பினாலும் அழுகை குரல்கள் விண்ணை பிளக்கிறது. இது பார்ப்போரை நிலைகுலைய வைத்துள்ளது. மேலும் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அரசுக்கல்லூரி மருத்துமனையில் தலைவர் ரவீந்திரனிடம் சிகிச்சை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். மாவட்ட கல்வி அதிகாரி சுபாஷினி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். காவல்துறை விசாரணை நடைபெற்றுவரும் வேளையில் சிஈ ஓ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில் ” மறைமுக கட்டணம் அந்த பள்ளியில் வசூல் செய்யப்படுகிறது. அரசு மானியம் பெறும் பள்ளியான கிறித்தவ சாப்ட்டர் பள்ளியில் சிலகாலமாக டயோசீஸ் நிர்வாக பிரச்சினை நீடித்து வருகிறது. ஒரு தனியார் அமைப்பு நடத்தும் பள்ளிக்கு எதற்கு அரசு மானியம். இதே போல இந்து அமைப்பினர் நடத்தும் பள்ளிகளுக்கு மானியம் கொடுக்கிறார்களா. இந்த விபத்துக்கு காரணம் நிர்வாக கோளாறு என்று தெரிய வரும் பட்சத்தில் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்” என கண்ணீரோடு தெரிவிக்கின்றனர்.
இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தலா ஒரு கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துவருகிறது.
…..உங்கள் பீமா