02-02-22/17.30pm
பாகிஸ்தான் : பிரபல தொழிலதிபர் ஒருவர் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் தான் கொல்லப்படலாம் என சில மாதங்களுக்கு முன்பே அவர் வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கி மாவட்டம் தகர்ஹி நகரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வசிப்பவர் தொழிலதிபர் சாத்தன் லால். இவர் தஹார் இனத்தை சேர்ந்தவர். கடந்த திங்களன்று சாத்தன் லாலுக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி தொழிற்சாலை மற்றும் மாவு மில் திறப்புவிழா நடந்தது. அதில் கலந்துகொண்ட சில மர்மநபர்கள் அவரை சுட்டுக்கொன்றனர்.

இதுகுறித்து பேசிய லாலின் நண்பர் முகி அனில்குமார் ” ஆன்மீகத்தலைவரான சன் சாத்ராம் அவர்களை வரவேற்க வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வரவேற்பு நடத்துகிறார்கள் என நினைத்தோம். ஆனால் பின்பு தான் லாலை சுட்டுக் கொன்றது தெரிய வந்தது. சில நாட்களுக்கு முன்னரே ஒரு வீடியோ வெளியிட்டார். அப்போதே என்னை கொள்ளப்போவதாகவும் கண்களை நோண்ட போவதாகவும் மிரட்டல் விட்டிருக்கின்றனர் சில முக்கிய புள்ளிகள்.

நீதிமன்றத்தில் அவர்கள் பெயரையும் குறிப்பிட்டு மனு ஒன்றை கொடுத்துள்ளார் லால். சாலையோரம் உள்ளன இரண்டரை ஏக்கர் நிலம் அவருக்கு சொந்தமானது. அதை கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அவர் கொடுக்க மறுக்கவே கொன்றுவிட்டார்கள்” என கூறினார். மேலும் லால் கொலையை தொடர்ந்து இரண்டாவது நாளாக உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் மறியலில் ஈடுபட்டனர்.


அதை தொடர்ந்து போலீசார் இன்று உள்ளூர் அரசியல் பிரமுகரான பச்சல் தக்கார் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கெஹெல் தாஸ் கோகிஸ்தானி கூறுகையில் “இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழும் இந்த பகுதியில் கலவரத்தை உருவாக்க சில சக்திகள் முயல்கின்றன” என குறிப்பிட்டார். ஆனால் இந்துக்கள் கிறித்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையின மக்கள் அடிக்கடி கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் பாகிஸ்தானில் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
….உங்கள் பீமா
