Sunday, April 19, 2026
Home > செய்திகள் > ஆஹா அகவிலைப்படி ஆசிரியர்கள் கொண்டாட்டம்…! அய்யோ அன்றாடங்காய்ச்சி..!

ஆஹா அகவிலைப்படி ஆசிரியர்கள் கொண்டாட்டம்…! அய்யோ அன்றாடங்காய்ச்சி..!

29-12-21/10.43am

சென்னை : தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை இரட்டிப்பாக்கி வழங்கியிருப்பது ஜாக்டோ ஜியோ அமைப்பினரை குஷிப்படுத்தியிருக்கிறது.

அகவிலைப்படி ஆசிரியர்களுக்கும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ள நிலையில் பொங்கலுக்கு ரேஷனில் வழங்கப்படும் ரொக்கத்தொகையினை பாதியாக குறைத்து வழங்குவது சராசரி குடிமகனை பெரிதும் பாதித்திருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த 7.9.2021 ல் முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவை விதி 110ன் கீழ் தமிழக அரசுப்பணியாளர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் என அனைவருக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார். நேற்று இதற்கான அரசாணையை வெளியிட்ட முதல்வர் 8894 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கூறுகையில் ” அம்மா உணவக ஊழியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க நிதியில்லை என கூறி ஆறாயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினர். மதுரையில் ஒப்பந்த ஊழியர்களை திடீரென பணியிலிருந்து நீக்கி 400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மதுரை நகராட்சி அலுவலகத்தில் நேற்றில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாமானிய மக்களுக்கு ரேஷனில் கொடுக்கப்படும் பொங்கல் பரிசு ரொக்கத்தொகையை கூட 1000 என குறைத்துவிட்டனர். இப்படி எதற்குமே நிதியில்லை என கூறிய திமுக அரசு ஊழியர்களை குளிரவைக்கவே இந்த செயலில் ஈடுபட்டிருக்கிறது” என விமர்சிக்கின்றனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் துப்புரவு பணியாளர்களின் பணி மிகவும் இன்றியமையாததாய் இருந்தது. அவர்களுக்கு போனஸாக 1000 ரூபாய் மட்டுமே வழங்குவது திமுகவின் பாரபட்ச உணர்வை வெளிப்படுத்துகிறது என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ” மாதம் 1000 ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் ரொக்கத்தொகையை கூட இந்த வருடம் வழங்குவார்களா என்பது தெரியவில்லை. கடந்த ஒண்ணரை வருடங்களுக்கு மேலாக வீட்டில் இருந்துகொண்டே ஆசிரியர்கள் முழு சம்பளமும் வாங்கினார்கள்.

அவர்களுக்கு எதற்கும் நிதியில்லாத காலத்தில் அகவிலைப்படியை உயர்த்திக்கொடுக்க வேண்டும். எங்களை போல ஏழை எளிய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நிதி இல்லை என்கிறபோது அகவிலைப்படியை இரட்டிப்பாக்க வேண்டிய அவசியம் என்ன” என கேள்வியெழுப்புகின்றனர்.

….உங்கள் பீமா