Saturday, July 27, 2024
Home > ஆன்மிகம் > தோண்ட தோண்ட ஆன்மிகம்..! ஆன்மீக பூமி தமிழகம் என நிரூபித்த சம்பவம்..!

தோண்ட தோண்ட ஆன்மிகம்..! ஆன்மீக பூமி தமிழகம் என நிரூபித்த சம்பவம்..!

28-12-21/17.10pm

ஆரணி : தமிழகத்தில் எங்கு பூமி தோண்டப்பட்டாலும் அங்கு இந்துக்கடவுடர்களின் சிலைகள் பழங்கால பொக்கிஷங்கள் அடிக்கடி கிடைக்கப்பெறுகின்றன. இது தமிழகத்தை ஆன்மீக பூமி என்பதை நிரூபித்து வருகிறது.

இந்நிலையில் ஆரணி கண்ணமங்கலம் அருகிலுள்ள கிராமமான பெரிய அய்யம்பாளையத்தில் பொ.வ 14ம் நூற்றாண்டை சேர்ந்த சமணப்படுகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்திற்கு வடமேற்கில் உள்ள ஒரு சிறிய மலைமீது புகழ்பெற்ற, பழமையான ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு குன்றின் மீது கிழக்கு நோக்கிய கருவறையில் நின்ற கோலத்தில் மூலவர் பெருமாள் அருள் பாலிக்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறைவன் பெருமாள் அருகில் உள்ள சிறிய குகையில் தங்கியிருந்தார். அப்போது மலையில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த வாய்பேச முடியாத சிறுவன் ஒருவன் இறைவனை தரிசிக்க அந்த சிறுவனுக்கு அருள்பாலித்து வாய்பேச வைத்ததார் இறைவன். அதனால் அன்றிலிருந்து பெருமாளுக்கு ’ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயர்’ என்ற திருப்பெயர் அமைந்ததாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

`

சம்புவராயர் ஆய்வு மைய அறக்கட்டளை செயலாளர் முனைவர் அ. அமுல்ராஜ் வரலாற்று ஆய்வாளர் ஆர். விஜயன் ஆகியோர் நேற்று முன்தினம் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த குகையில் மூன்று சமணக் கற்பாழிகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அத்துடன் அந்த குகைக்கு மேலே உள்ள பாறைமீதும் மூன்று சமணப் பாழிகள் வெட்டப்பட்டிருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் “பெரிய அய்யம்பாளையம் மலைக்கோயிலின் மேல் உள்ள மூலவரின் அறைக்கு தெற்கில் இருபெரிய பாறைகளின் நடுவில் இந்த சமணக்குகை அமைந்துள்ளது. குகையின் நுழைவிடம் ஒரு சிற்றாலயம் போன்ற தோற்றத்தைத் தருகிறது. நீளமான கருங்கல் சுவரும், நான்கு அடி உயரம் கொண்ட சிறிய வாயிலும் செதுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

```
```

வாயிலின் உள்ளே சென்றால், ஒரு பம்பரத்தின் அடியைப் போல, கீழ்புறம் குறுகலாகவும், மேற்புறம் அகன்றும் உள்ள ஒரு பெரிய பாறையைக் காணலாம். இதன் தரைப்பரப்பில் வடக்கு நோக்கியவாறு மூன்று படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த சமணப்படுக்கைகள் சற்று ஆழமில்லாமல் செதுக்கப்பட்ட நிலையே அதன் பழமையை வெளிப்படுத்துகிறது.

குகையின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள சுவர் கனப்பரிமாணமும், அதன் வாயிலின் வெளிப்பகுதியில் காணும் இரு அனுமன் மற்றும் கருடாழ்வார் சிற்பங்களும், அதன் அருகில் தெளிவின்றி, தொடர்ச்சியற்று காணப்படும் கல்வெட்டுகளையும் வைத்துப்பார்க்கும்போது, இச்சுற்று சுவரானது கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதமுடிகிறது. ஆனால் குகையின் உள்ளே வெட்டப்பட்டுள்ள சமணப்படுக்கைகள் இதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகக் அறியமுடிகிறது” என தெரிவித்தனர்.

…..உங்கள் பீமா