14-1-22/09.25am
திருப்பதி : விமானநிலையம் மற்றும் விமான நிலைய குடியிருப்பு பகுதிகளில் திடீரென குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
ஆந்திர அமைச்சராக இருப்பவர் போட்ஸா சத்யநாராயணா. அவர் திருப்பதியில் நடந்த தேசிய அளவிலான கபடிப்போட்டியின் நிறைவு விழாவிற்கு சென்றார். அவரை வரவேற்க திருப்பதி மேயரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ கருணாகர ரெட்டியின் மகனுமான அபிநயரெட்டி சென்றிருந்தார். அப்போது விமானநிலையத்தில் இருந்த பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஒரு வாரமாக இதை நினைத்தே புலம்பிய அபிநயரெட்டி நேற்று திருப்பதி விமான நிலையம் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் குடியிருப்புக்கு செல்லும் குடிநீர் சப்ளையை நிறுத்தினார். இதனால் ஒருநாள் முழுவதும்குடிநீர் இல்லாமல் விமான நிலையமே அல்லோகலப்பட்டது. விசாரணையில் ஏர்போர்ட் அத்தாரிட்டி மேனேஜர் சுனில் அபிநயரெட்டி மற்றும் அவரது உதவியாளர் இருவருக்கும் அனுமதி மறுத்ததாக தெரியவந்தது. இதனால் இந்த விபரீத செயலில் அபிநயரெட்டி ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
திருப்பதி முனிசிபல் அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்தபோது விமான நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இரண்டு நாட்களில் சரிசெய்யப்படும் என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து ஆளும் கட்சி தரப்பில் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
…….உங்கள் பீமா