28-12-21/13.48pm
கும்பகோணம் : உலகப்புகழ்பெற்ற பழமையான சனீஸ்வரபகவான் திருத்தலம் கும்பகோணம் அருகே உள்ள திருநள்ளாறில் அமைந்துள்ளது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும் பாவங்களில் இருந்து விடுபடவும் தரிசனத்திற்கு வருவது வழக்கம்.

முன்பு பக்தர்கள் கோவில் வளாகத்திலேயே சமைத்து பரிகார உணவாக யாசகர்களுக்கு வழங்குவது வழக்கம். கொரோனா பெருந்தொற்றால் கோவில் வளாகங்களில் சமையல் செய்ய தடைவிதிக்கப்பட்டதை அடுத்து பரிகார உணவு ரோட்டோர வியாபாரிகள் பல்கிப்பெருகினர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த ரோட்டோரக்கடைகளில் பரிகார உணவை வாங்கி யாசகர்களுக்கு கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த பரிகார உணவு தரமற்றதாய் இருப்பதாக தொடர் புகார் எழுந்தது. அதையடுத்து உணவுப்பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பரிகார உணவு பொட்டலம் 20 முதல் 30 ரூபாய் என விற்றுள்ளனர்.

அதை வாங்கும் பக்தர்கள் அங்கிருக்கும் யாசகர்களுக்கு கொடுக்கின்றனர். சிறிது நேரத்திலேயே அந்த யாசகர்கள் கடைக்காரரிடம் அதே பொட்டலத்தை கொடுத்து காசாக்கி கொள்கின்றனர். இதில் பல நாள் ஆன கெட்டுப்போன உணவும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதை கையும்களவுமாக பிடித்துள்ளார் அதிகாரி ரவிசந்திரன். அதன்பின்னர் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு அங்கிருந்த ஆயிரக்கணக்கான கெட்டுப்போன பொட்டலங்களை பறிமுதல் செய்தார். இது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மன அமைதிக்காகவும் பக்தி பரவசத்திலும் இறைவனை காண வரும் பக்தர்களுக்கு இடையூறாக கோவிலின் வாசலிலேயே திருநங்கைகள் மற்றும் யாசகர்கள் வலுக்கட்டாயமாக கையை பிடிக்காத குறையாக நச்சரித்து யாசகம் கேட்பது பல பக்தர்களை முகம் சுளிக்கவைக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் இதே நிலைமைதான். இத தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கூறிவருகின்றனர்.
……உங்கள் பீமா