டெல்லி : காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்ட மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தான் தங்கம் வெல்வதையே லட்சியமாக கொண்டிருந்ததாகவும் அதற்காக மக்கள் தன்னை மன்னிக்கவனேடும் எனவும் கண்ணீர்மல்க கூறியிருந்தார்.
இது நாடெங்கும் மிகவும் வைரலாகியிருந்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் வீராங்கனை கெலாட்டிற்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் மனம்திறந்து பாராட்டியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் 22 ஆவது காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்தியா தரப்பில் 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என 40 பதக்கங்களுடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று மகளிருக்கான 76கி எடைப்பிரிவு ப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பூஜா கெலாட் ஆஸ்திரேலிய வீராங்கனையான நவோமியை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பூஜா ” நான் வெண்கல பதக்கம் வென்றதற்காக எனது நாட்டினரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். தங்கம் வென்று நமது நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன்” என கண்ணீர் விட்டு கதறியழுதார்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில் ” பூஜா, உங்களது வெற்றி கொண்டாடப்படவேண்டியது. மாறாக வருத்தப்படவேண்டியது அல்ல. உங்கள் பதக்கம் கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உங்கள் வாழ்க்கைப்பயணம் எங்களை ஊக்குவிக்கிறது. இந்த வெற்றி எங்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
