Friday, August 21, 2026
Home > அரசியல் > திசைமாறும் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு..!? திமுக அரசு பதிலளிக்க நீதிமன்றம் கெடு

திசைமாறும் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு..!? திமுக அரசு பதிலளிக்க நீதிமன்றம் கெடு

19-4-22/13.11PM

சென்னை : தமிழக திமுக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க மறுத்து சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்திருந்தது. இந்த தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் இடைக்காலதடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2011-15 ஆண்டுகளில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. தற்போது திமுகவில் இணைந்து அமைச்சராக உள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பலரிடம் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பல வழக்குகள் பதிவாகின. இந்த வழக்குகள் எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜி மீதான வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதனிடையே செந்தில்பாலாஜிக்கு எதிரான டிஜிட்டல் உள்ளட்ட ஆவண ஆதாரங்களை வழங்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அமலாக்கத்துறை துணை ஆணையர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முதல்தகவல் அறிக்கை குற்றப்பத்திரிக்கை நகல்களை வழங்க உத்தரவிட்டதோடு குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க முடியாது என நிராகரித்துவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து துணை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். கடந்த மார்ச் 30 அன்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும் ஆவணங்களை ஆய்வுசெய்து அதன்பின்னர் நகல்வழங்க கோரி அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என தீர்ப்பளித்திருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கரூரை சேர்ந்த எம்.கார்த்திகேயன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் திடீரென உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிற்கு சென்ற கரூரை சேர்ந்த எம். கார்த்திகேயன் யார் அவருக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு. இந்த வழக்கில் இவர் மேல்முறையீட்டிற்கு சென்ற காரணம் என்ன போன்ற விஷயங்கள் மர்மமாக உள்ளதாக கரூர் அதிமுகவினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

….உங்கள் பீமா