4-2-22/11.28am
சென்னை : தமிழக பிஜேபி கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருப்பவர் நடிகை காயத்ரி ரகுராம். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவர் சார்ந்த பிரிவின் தலைவர்களை நீக்கி சர்ச்சையை கிளப்பியுள்ளார். மேலும் புது நிர்வாகிகளை நியமித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

திருமதி.காயத்ரி தனது அறிக்கையில் ” கட்சிக்கு புறம்பாக செயல்படும் கலாச்சார பிரிவின் நிர்வாகிகளான பெப்சி சிவா, பாபுகணேஷ், விருகை வெங்கடேஷ், அழகன் தமிழ்மணி ஷர்மா, ரிஷி, உமேஷ் பாபு ஆகியோர் கட்சி நிர்வாக பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.

மேலும் மாநில பொறுப்பாளர்களாக டைரக்டர் திருமலை, நடிகர் சசிகுமார் சுப்பிரமணி,சங்கீதா, எழுத்தாளர் ஜனனி நாராயணன், ரேகா துரைலிங்கம், சுகுப்போபாண்டியன், ஹரிதாஸ், ஜனனி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மாநிலத்தலைவர் அண்ணாமலை இதை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். மேலும் பொதுச்செயலாளர் செல்வகுமார் இந்த நியமனத்தை உறுதிப்படுத்தியுள்ளார்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்க்கு மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பதிலறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” கலாச்சார பிரிவு தலைவரான திருமதி.காயத்ரி ரகுராம் அவர்கள் அந்த பிரிவின் நிர்வாகிகள் மற்றம் குறித்து சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த சுற்றறிக்கையில் இல்லாமல் கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிப்பார்கள் என மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த முடிவை தான் ஏற்பதாக காயத்ரி அவர்கள் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் நேற்று இரவு “என்னை நம்பும் மக்களுக்காக எதுவும் செய்வேன். நீதிக்காக மட்டுமே” என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். மாநில தலைவருடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக காயத்ரி ரகுராம் முடிவெடுத்திருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

….உங்கள் பீமா