புதுதில்லி : இந்திய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து நாட்டின் 16 ஆவது ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.ஆளும் கட்சியான பிஜேபி வழக்கம்போல வேட்பாளர் குறித்த தகவலை வெளியிடாமல் மௌனம் காக்க எதிர்க்கட்சிகள் இவரை நிறுத்தலாமா அவரை நிறுத்தலாமா என குழம்பிபோயுள்ளன. மேலும் அறிவித்த இரு வேட்பாளர்களும் ஜகா வாங்கிய நிலையில் மேலும் சிக்கலை சந்தித்துள்ளன எதிர்க்கட்சிகள்.
கடந்த ஜூன் 15அன்று மேற்குவங்க முதல்வர் மமதா பானெர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் 17 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன. காங்கிரஸ் திமுக என்சிபி ஆர்ஜேடி உட்பட முக்கிய கட்சிகள் கலந்துகொண்டாலும் ஆம் ஆத்மீ, சிவசேனா, கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஒவைசியின் AIMIM உட்பட பிரதான கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டன. இந்த கூட்டத்தில் என்சிபி தலைவரான சரத்பவாரை குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்த ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மம்தா நேரடியாக பவாரை சந்தித்திருந்தார். ஆனால் அதையடுத்து பவார் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தன்னை வேட்பாளராக நிறுத்த முன்மொழிந்த மமதாவுக்கு நன்றிகள். ஆனால் முதலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் அதன்பிறகே தேர்தலில் நிற்பது குறித்து முடிவெடுக்க முடியும். மஹாராஷ்டிர மக்களுக்கு சேவை புரிய நான் கடமைப்பட்டுள்ளேன். அதனால் எனது பெயரை பட்டியலில் இருந்து நீக்கவும்” என்ற ரீதியில் கூறியுள்ளார்.
இதனால் பவார் மீது கடும் ஆத்திரத்தில் மமதா இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நாளை (திங்கட்கிழமை) எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை தேர்நதெடுக்கப்படுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற மமதா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் அவரது மருமகனான அபிஷேக் பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என கருதப்படுகிறது.
திரிபுராவில் நான்கு தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருப்பதால் நேற்று அகர்தலா சென்றுள்ள அபிஷேக் பானர்ஜி தேர்தல் பணிகளை முடித்துவிட்டு திங்கட்கிழமை காலை 11 மணியளவில் கூட்டத்தில் கலந்துகொள்வார் என திரிணமூல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பவாரை அடுத்து மமதா ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லாவை ஜனாதிபதி வேட்பாளராக மம்தா முன்மொழிந்திருந்தார்.
இதற்க்கு பதிலளித்த பரூக் ” மமதா சாஹிப்புக்கு நன்றிகள். எனது பெயரை முன்மொழிந்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் அசாதாரண சூழலால் என்னால் போட்டியிட முடியாது. நான் காஷ்மீர் மக்களுக்காக மாநில அரசியலில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன்” என தடாலடியாக பல்டி அடித்துவிட்டார். இதனாலும் மமதா டென்ஷனாகியுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தரப்பில் ப.சிதம்பரம் அல்லது தெலுங்கானாவை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன. இதுவரை திரைமறைவில் வேட்பாளராக்க பேசப்பட்ட யாரும் சம்மதிக்கவில்லை என சொல்லப்படும் நிலையில் அடுத்து நடக்க இருக்கும் வேட்பாளர் தேர்வு கூட்டம் ஒரு சாதாரண கூட்டமாகவே இருக்கும் எனவும் வேட்பாளர்கள் விஷயத்தில் எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
