திருச்சி : திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு காவல்துறையினரின் நடவடிக்கைகளை கண்டித்து தம்பதியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. தீக்குளிக்க முயன்ற தம்பதியினரை பாதுகாப்பு போலீசார் சமாதானம் செய்து அனுப்பிவைத்ததாக கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டம் அறியாமங்கலம் பகுதியை அடுத்து உள்ள உக்கடை பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத். இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனம் மூலம் லாரி ஒன்றை வாங்கியுள்ளார். மாதம்தோறும் அதற்கான தவணையை கட்டிவந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் லாரியின் ஆவணங்களை தொலைத்துவிட்டார் என தெரிகிறது.
அதனால் மாதத்தவனையை மூன்று மாதங்களாக செலுத்த மறுத்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதனால் அந்த தனியார் நிறுவனம் ஷேக்கை தொடர்ந்து மாதத்தவனை கட்டுமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே நிறுவனத்தின் தொடர் வற்புறுத்தலால் லாரியை ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
ஸ்ரீரங்கம் காவல்துறையினர் தொடர்புடைய நிறுவனத்திடம் அந்த லாரியை ஒப்படைத்துவிட்டனர். இதையறிந்த ஷேக்தாவூத் தனது அனுமதியில்லாமல் காவலர்கள் நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக கூறி காவல்துறையின் மீதே புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன்பேரில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த ஷேக் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்றார்.
காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்து தீக்குளிக்க முயன்றபோது அருகில் பாதுகாப்பிற்கு நின்ற காவலர்கள் தண்ணீர் ஊற்றி நெருப்பை பற்றவைக்க விடாமல் தடுத்தனர்.இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்து சென்ற காவலர்கள் தம்பதியினரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது. பெரும் அசம்பாவிதம் நடக்காமல் தடுத்த காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
