Thursday, May 21, 2026
Home > அரசியல் > கூட்டணி மாற்றம்..? திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டம்..?

கூட்டணி மாற்றம்..? திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டம்..?

modi and stalin

 

சென்னை : திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாளில் இருந்து அதன் நிர்வாகிகள் மற்றும் அதன் அமைச்சர்கள் திமுக ஆதரவு ஊடகங்கள் என ஒரே குரலில் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்துவந்தனர். இந்நிலையில் திடீர் மாற்றமாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு என அழைத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



மேலும் பிரதமர் மோடியுடனான திமுகவின் சமீபத்திய நெருக்கம் அதன் கூட்டணி கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார்.

செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் காட்டிய இணக்கம் இருதரப்பும் அடுத்துவரவிருக்கும் தேர்தலில் கூட்டணிவைப்பதற்கான முன்னோட்டம் என பலரால் விமர்சிக்கப்பட்டது. திமுக பிஜேபி கூட்டணி என சில தலைவர்களாலேயே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் இதுகுறித்து இன்று விளக்கம் அளித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த பிரபல செய்திநிறுவனமான மனோரமா நியூஸ் கான்க்ளேவ் 2022 என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அதில் பேசிய திமுக தலைவர் ” இந்தியா என்பது பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழும் நாடு. இங்கு ஒற்றை மொழி தேசியமொழியாகவோ அல்லது அரசியல் அல்லது ஆட்சிமொழியாகவோ மாற முடியாது. ஹிந்தி ஒருபோதும் திணிக்கப்படாது என மறைந்த பிரதமர் நேரு உறுதியளித்திருந்தார்.


தற்போதுள்ள சூழலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியே தொடரும். எங்களது கூட்டணி தேர்தலுக்கானது அல்ல. கொள்கை அடிப்படையிலான கூட்டணி. இந்தியா மேலும் வலிமையோடு இருக்க ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்” என அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் திமுக மற்றும் பிஜேபி இடையிலான இணக்கம் மற்றும் இருதரப்பும் விமர்சனம் செய்யாமல் கடந்து சென்றது அரசியல் விமர்சகர்களிடையே பல சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.