தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல்… ஐந்தே நாட்களில் பொன்னியின் செல்வன் சாதனை!
பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து தொடங்கி பின்னர் கைவிட்டார்.
ஒருவழியாக இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.

3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஐந்தே நாட்களில் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு வெளியான வலிமை, பீஸ்ட், கேஜிஎஃப் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டியுள்ளது பொன்னியின் செல்வன்.
அலைபாயுதே படத்துக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் எந்த படமும் வணிக ரீதியாக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறவில்லை. அந்த குறையை பொன்னியின் செல்வன் போக்கியுள்ளது.
