Friday, August 21, 2026
Home > Cinema > அடல்ட் காமெடி ஜானரில் கோமாளி இயக்குனர் பிரதீப் நடிக்கும் ‘லவ் டுடே’… டிரைலர் ரிலீஸ்

அடல்ட் காமெடி ஜானரில் கோமாளி இயக்குனர் பிரதீப் நடிக்கும் ‘லவ் டுடே’… டிரைலர் ரிலீஸ்

கோமாளி திரைப்படத்தின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களைப் பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

அதன் பிறகு பிரதீப் நடிகர் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படம் தொடங்கப்படாததால் இப்போது அவரே கதாநாயகனாக நடித்து லவ் டுடே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காதலை பிரதிபலிப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் 18+ நகைச்சுவைக் காட்சிகளோடு உருவாகியுள்ளது போல தோன்றுகிறது. காதலர்கள் தங்கள் செல்போன்களை மாற்றிக் கொண்டு ஒரு நாள் வாழும்போதும் ஏற்படும் பிரச்சனைகளை பற்றிய படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.

டிரைலரில் சில் கெட்டவார்த்தை வசனங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சத்யராஜ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.