12-3-22/9.04am
இந்தியா : இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தங்கள் நாட்டை தாக்க முனைந்ததாக பாகிஸ்தான் கூச்சலிட்டு வருகிறது. மேலும் ஆதாரங்களுடன் ஐநா சபையில் புகார் அளிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஜெனெரல் பாபர் இப்திகார் கூறுகையில் “கடந்த 9 மார்ச் அன்று மாலை 6.43 அளவில் இந்திய எல்லைக்குள் இருந்து வேகமாக ஒரு பொருள் வருவதை உணர்ந்தோம். அது திடீரென திசைமாறி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து தாக்கியது. சில சேதங்களை அது ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உயிர்சேதம் ஏற்படவில்லை” என குறிப்பிட்டார்.

இந்திய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ” வழக்கமான பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத தொழில்நுட்பக்கோளாறினால் ஏவுகணை தானாக ஏவப்பட்டுள்ளது. இதுகுறித்த மேல்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு இந்தியா வருந்துகிறது” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த பிரம்மோஸ் ஏவுகணையில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட WARHEAD பொருத்தப்பட்டிருக்கவில்லை. ஒருவேளை பொறுத்தப்பட்டிருந்தால் உயிர்சேதம் ஆகியிருப்பதுடன் இருநாடுகளுக்கிடையே போர்சூழல் உருவாகியிருக்கும் என முன்னாள் ராணுவ வீரர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்.

இந்த பிரம்மோஸ் ஏவுகணை கடல் நிலம், நீர்மூழ்கி கப்பல் என அனைத்து தளங்களில் இருந்தும் இயக்க கூடிய ஒன்றாகும். ரஷ்யா இந்தியா கூட்டுத்தயாரிப்பான இந்த ஏவுகணையின் விலை தோராயமாக 13 கோடிகளாகும்.

மேலும் இதுபோன்ற தவறினால் ஏற்கனவே நாம் ஆறு உயிர்களை இழந்துள்ளோம். கடந்த 2019 பிப்ரவரி 27 அன்று நமது MI 17 ரக ஹெலிகாப்டர் ஒன்று நமது ராணுவத்தை சேர்ந்த ஸ்பைடர் மிசைல் கொண்டு தாக்கப்பட்டு ஆறு விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.


இது தெரியாமல் நடந்த மாபெரும் தவறு என ஏர் சீப் மார்ஷல் பாடவ்ரியா தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் ஸ்ரீநகரில் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் ரஷ்யா இடையே போர் நிலவி வரும் வேளையில் ராணுவத்தின் இந்த பொறுப்பற்ற செயல் மக்களிடையே பெரும் பதட்டத்தை உண்டுபண்ணியுள்ளது.

கடந்த கால தவறிலிருந்து இந்தியா இன்னும் பாடம்கற்கவில்லை என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
…..உங்கள் பீமா
