தமிழ் சினிமா மற்றும் சீரியல் என இரண்டு துறைகளிலும் பிரபலமாக அறியப்படுபவர் பப்லு பிருத்விராஜ். 57 வயதாகும் இவர், சமீபத்தில் மலேசியாவைச் சேர்ந்த 26 வயது ஷீத்தல் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவ, அதை மறுத்த பிருத்விராஜ் இருவரும் லிவின் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக கூறினார். இருவரும் இணைந்து ஒன்றாக காதல் பறவைகளாக வலம் வந்தனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமாண்டிக் வீடியோக்களாக பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் சமீப நாட்களாக இருவரும் எந்த வீடியோவையும் பதிவிடவில்லை. சமீபத்தில் பப்லு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய போதும் ஷீத்தல் அவருடன் இல்லை. மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த ஏற்கனவே பகிர்ந்த வீடியோக்களையும் ஷீத்தல் டெலிட் செய்தனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஷீத்தலிடம் “நீங்கள் இருவரும் இப்போது பிரிந்து விட்டீர்களா?” என கமெண்ட் செய்ய, அந்த கமெண்ட்டை லைக் செய்துள்ளார் ஷீத்தல். இதன் மூலம் இருவரும் பிரிந்தது உறுதியாகியுள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் தாங்கள் இன்னும் பிரியவில்லை என்றுதான் சொல்லி வருகிறார் பிருத்விராஜ். இது சம்மந்தமான கேள்விக்கு “நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக நாங்கள் எங்குமே சொல்லவில்லை. நீங்களாக நாங்கள் பிரிந்துவிட்டோம் என்கிறீர்கள். நான் ஒரு நடிகன். என் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுக்க வேண்டியது என் வேலை. அதை விட்டுவிட்டு என் அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் துவைப்பது அநாகரிகம். நான் என்ன செய்தாலும் விமர்சிக்கவும், ஆதரிக்கவும் 10 பேர் இருப்பார்கள். என் தனிப்பட்ட விசயங்களை பொதுவெளியில் வைக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் அதன் பிறகு ஷீத்தலும் பிரித்விராஜும் ஒன்றாக எங்குமே காணப்படவில்லை. இந்த விசயம் சில வாரங்களில் அடங்கிவிட்ட பிறகு இப்போது மீண்டும் அதுபற்றி மனம் திறந்து பேசியுள்ளார் ஷீத்தல். தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “வணக்கம் ரசிகர்களே… நீங்கள் கடந்த சில மாதங்களாகவே என்னைப் பற்றி அதிகமாக கேள்விகள் கேட்டு வருகின்றீர்கள். நிறைய பேர் என்னுடைய தற்போதைய நிலையை தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். நானும் பிரித்விராஜும் திருமணம் செய்துகொள்ளவில்லை. லிவ் இன் உறவில் இருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி எங்கள் உறவு செல்லவில்லை. எங்களின் பிரிவுக்குப் பிறகு இப்போது நாங்கள் இருவரும் சிறப்பாக இருக்கிறோம். எங்களின் இந்த முடிவை மதித்து எங்களுக்கான இடைவெளியைத் தருவீர்கள் என நம்புகிறேன். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.
