சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது இயக்குனர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவரோடு அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதையடுத்து ரஜினி ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்க, அன்பறிவ் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்குகின்றனர். இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படம்தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ரஜினி தன்னுடைய 172 ஆவது படத்தை இயக்கப் போகும் இயக்குனரை உறுதி செய்துவிடடாராம். அவர் வேறு யாருமில்லை இயக்குனர் மாரி செல்வராஜ்தான் என்று சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தை தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
மாரி செல்வராஜ் இப்போது வாழை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன்பிறகு அவர் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அதன் பிறகு அவர் ரஜினி 172 படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்க 2 ஆண்டுகள் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் மாரி செல்வராஜ் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
