தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருபவர். 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார். தமிழில் இவரை பாரதிராஜா பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார்.
ஆனால் அவரை ஒரு பிரபல நடிகையாக மாற்றியது ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த மகதீரா திரைப்படம்தான். அந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றி அவரை தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக்கியது. அதன் பின்னர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், சூர்யா, மகேஷ் பாபு மற்றும் பிரபாஸ் எனப் பலருடனும் இணைந்து நடித்தார்.
தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த காஜல் கொரோனா காலத்தில் பெற்றோர் பார்த்து வைத்த காஜல் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.

குழந்தை பிறந்ததும் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காஜல், அப்போது தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார். அதில் “என் குழந்தை பிறந்த இரண்டு மாதத்திலேயே எனக்கு ஷூட்டிங் இருந்தது. நான் ஷூட்டிங் செல்லும் இடம் மிகவும் வெப்பமானது என்பதால் குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்வேன்.
அப்போது கேரவனுக்கு வந்து என் தாய்ப்பாலை சேகரித்து ஐஸ் பெட்டிக்குள் வைத்து என் டிரைவரிடம் கொடுத்து அனுப்புவேன். அவர் போய் கொடுத்து வந்ததும் இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் தாய்ப்பால் சேகரித்து கொடுத்து அனுப்புவேன். இப்படிதான் என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் கொடுப்பேன். ஏனென்றால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அவ்வளவு முக்கியம் என்பதால்தான்” எனக் கூறியுள்ளார்.