நடிகை லைலா தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
2022 ஆம் ஆண்டில் நடிகர் கார்த்தியின் மூன்றாவது ரிலீஸாக சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ராஷி கண்ணா, லைலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த படத்தின் கவனிக்கத்தக்க அம்சமாக நடிகை லைலா மீண்டும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். 2000களின் தொடக்கத்தில் தீனா, நந்தா, முதல்வன் மற்றும் பிதாமகன் என பல வெற்றிப்படங்களில் நடித்த அவர், தனது வெகுளியான நடிப்புக்காக பேசப்பட்டவர்.

கடைசியாக அஜித்தோடு பரமசிவன் படத்தில் நடித்தார். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் சர்தார் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் “என்னை படப்பிடிப்பின் போது ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க. அது சம்மந்தமான வீடியோவ நான் எடிட் பண்ணி வெளியிடுறேன்” எனக் கூறி படக்குழுவினரை கேலி செய்துள்ளார்.
