அஜித்தின் துணிவு திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் இடையே பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அஜித் & இயக்குனர் வினோத் கூட்டணியில் வலிமை படத்துக்குப் பிறகு உருவாகியுள்ள துணிவு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 1 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடலின் மூலம் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து படத்தை பார்த்துள்ளனர்.

அட்டகாசமான முதல் பாதி ஏற்கனவே இயக்குனர் வினோத் சொன்னது போல அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டு அன்லிமிடெட் அசைவ விருந்தாக உருவாக்கப்பட்டுள்ளது. மங்காத்தா படத்துக்கு பிறகு நெகட்டிவ் ஷெட்டில் அஜித் முழுக்க முழுக்க முதல் பாதியில் அதகளம் செய்கிறார். துப்பாக்கியை வைத்துக்கொண்டு வங்கியில் டான்ஸ் ஆடுவது, குறிப்பாக மைக்கேல் ஜாக்சன் போல மூன் வாக் செய்வது எல்லாம் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் மொமண்ட்.

இப்படி விறுவிறுப்பாக செல்லும் முதல்பாதிக்கு பிறகு அடுத்து வரும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் நடக்கும் மோசடிகள், அதன் மூலம் மக்கள் எப்படி ஏமாற்றப் படுகிறார்கள் என்பது பற்றிய கருத்துடன் செல்கிறது. முதல் பாதியை ஒப்பிடும் போது இரண்டாம் பாதி மெதுவாக செல்கிறது. ஆனால் இந்த பொறுமையை க்ளைமேக்ஸ் காட்சி ஈடுசெய்கிறது.

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு படமாகவும், பொதுவான ரசிகர்களுக்கும் பிடித்த படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் வினோத். படத்தில் ஒளிப்பதிவு, மற்றும் ஜிப்ரானின் பின்னணி இசை பலமாக அமைந்துள்ளது. வி எஃப் எக்ஸ் காட்சிகளில் பல குறைகள் தெரிகின்றன. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோருக்கு சிறிய பாத்திரமே என்றாலும், குறைவில்லாமல் செய்துள்ளனர்.
