சமூகவலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவற்றின் வருகைக்குப் பிறகு சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் போல ரசிகர்கள் இடையே மிகுந்த பிரபலத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சீரியலில் கலக்கிய பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போன்றவர்கள் இப்போது சினிமாவிலும் கலக்க ஆரம்பித்துள்ளனர்.

இப்போது சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி, ஆல்யா மானசா போன்றவர்களுக்கும் எக்கச்சக்கமாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர்களை பின்தொடர்பவ்ரகளின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அந்தவகையில் செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர்தான் நடிகை ஷபானா ஷாஜகான். மும்பையைச் சேர்ந்த இவர் தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலேயே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டார். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரான இவர் சீரியலில் இந்து பெண்ணாக பார்வதி என்ற வேடத்தில் நடித்து வருகிறார்.

இதுபற்றி பேசிய அவர் ‘நான் சீரியலில் பொட்டு வைத்துக் கொண்டு நடித்ததற்காக என் குடும்பத்தினர் என்னிடம் ஒரு வருட காலம் பேசவில்லை. இந்து பையனை திருமணம் செய்யக் கூடாது எனவும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதனால்தான் நான் ஒரு இந்து பையனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ஆரியன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஷபானாவின் இந்த பேட்டி இப்போது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக பலரும் இப்போது அவரது பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
