தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனகா. அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து ரஜினியோடு சேர்ந்து நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். பெரிய உயரங்களை தொட்டாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய காமெடி நடிகர் விவேக்குக்கு ஜோடியாக விரலுக்கேத்த வீக்கம் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
கனகாவின் அம்மா தேவிகா, தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர். அவருக்கும் சினிமா உதவி இயக்குனருக்கும் திருமணம் ஆக அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் கனகா. ஒரு கட்டத்தில் தாய் தேவிகா மரணத்தால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டார் கனகா. அதுமட்டுமில்லாமல் அவரது தந்தையோடு ஏற்பட்ட சொத்து தகராறும் அவரை மனதளவில் பாதித்தது.
இதனால் சென்னையில் இருக்கும் தனது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் கனகா. ஒருமுறை அவர் வீட்டில் தீவிபத்து ஏற்பட்ட போதுகூட அவர் வெளியில் வராமல் முரண்டு பிடித்தார். சினிமா உலகில் அவருக்கு நெருக்கமானவர்கள் எத்தனையோ பேர் அவரை சந்திக்க முயன்றும் யாரையும் அவர் சந்திக்கவில்லை. அவரை அறிமுகப் படுத்திய இயக்குனர் கங்கை அமரனைக் கூட சந்திக்க மறுத்துவிட்டார்.
திருமணமே செய்துகொள்ளாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவரை சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி சந்தித்து, இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில் கனகா குண்டான தோற்றத்தில் ஆள் அடையாளமே தெரியாத விதத்தில் காணப்பட்டார். பலரும் அவரின் தோற்றத்தை பார்த்து ஆச்சர்யமடைந்தனர்.
இந்த புகைப்படத்தைப் பகிர்ந்த குட்டி பத்மினி விரைவில் கனகா தன்னுடைய யுட்யூப் சேனலில் ஒரு நேர்காணலை அளிக்க ஒத்துக்கொண்டுள்ளார் எனக் கூறியிருந்தார். அதுமுதல் ரசிகர்கள் அவரின் வீடியோவுக்குக் கீழே கமெண்ட்டில் “எப்போது கனகாவின் நேர்காணல் வீடியோ வரும்” என நச்சரிக்க தொடங்கினர்.
அதற்கு இப்போது குட்டி பத்மினி பதிலளித்துள்ளார். அதில் “நான் அவருக்கு வாட்ஸ் ஆப் இன்ஸ்டால் செய்துகொடுத்து என் நம்பரையும் கொடுத்து வந்தேன். ஆனால் இப்போது நான் மெஸேஜ் செய்தால் அதை படித்துவிட்டும் அவர் பதிலனுப்பவதில்லை. மேலும் நான் அழைத்தாலும் அவர் போனை எடுப்பதில்லை. அவர் தனிமைதான் மிகவும் விரும்புகிறார் போல. அதனால் அவரை நேர்காணல் எடுக்க முடியாததற்காக வருந்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.
