Saturday, August 22, 2026
Home > Cinema > சிம்பு ஏ ஆர் முருகதாஸ் ரகசிய சந்திப்பு… விரைவில் நல்ல செய்தி வரலாம்!

சிம்பு ஏ ஆர் முருகதாஸ் ரகசிய சந்திப்பு… விரைவில் நல்ல செய்தி வரலாம்!

தமிழ் சினிமாவில் தீனா படத்தின் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் முருகதாஸ். அதையடுத்து அவர் இயக்கிய ரமணா மற்றும் கஜினி ஆகிய திரைப்படங்கள் அவரை முன்னணி இயக்குனராக்கின. அதிலும் கஜினி திரைப்படத்தை அவர் இந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக்கினார். அதனால் அவரின் சம்பளமும் மார்க்கெட்டும் கிடுகிடுவென உயர்ந்தன.

அதன் பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்து ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி உச்சத்துக்கு சென்றார். இந்நிலையில் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் திரைப்படம் படுதோல்வி அடைந்ததோடு மோசமான விமர்சனங்களையும் பெற்றது. அதையடுத்து அவர் விஜய்யுடன் மீண்டும் இணைய இருந்த திரைப்படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அவர் படம் இயக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய ஹிட் படமான கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் சூர்யாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கோடம்பாக்க வட்டாரத்தில் தகவல்கள் பரவுகின்றன.

ஆனால் இப்போதைய தகவல்களின் படி சிம்புவை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை அவர் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் இரண்டு முறை சந்தித்து கதை சம்மந்தமாக விவாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.