தமிழ் தொலைக்காட்சிகளை இப்போது பெரியளவில் சீரியல்கள் ஆக்கிரமித்துவிட்டன. சீரியல்களின் ஆதிக்கத்தால் இப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட ஸ்பெஷல் எபிசோட்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு தமிழ் நாட்டு பெண்கள் சீரியல்களை ஆர்வமாக பார்க்கின்றனர்.
ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பானாலும், சில சீரியல்கள்தான் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றன. மக்களால் அதிகமாக பார்க்கப்படும் சீரியல்கள் டி ஆர் பி புள்ளிகள் மூலமாக வரிசைப்படுத்தப்படுகின்றன. வாரம் வாரம் எந்த சீரியல் அதிகமாகப் பார்க்கப்படுகிறது என டி ஆர் பி புள்ளிகள் மூலமாக அறியப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சன் டி வி டி ஆர் பியில் முன்னணியில் இருந்த சீரியல் எதிர்நீச்சல். அதற்கு முக்கியக் காரணம் அந்த சீரியலில் நடித்த நடிகர் மாரிமுத்துதான். அந்த சீரியலின் முக்கியக் கதாபாத்திரமான ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தின் மூத்த அண்ணனாக ஆதி குணசேகரனாக மிடுக்கான ஒரு நடிப்பை வழங்கினார்.
இந்த சீரியல் வழக்கமாக சீரியல் பார்க்கும் எண்ணம் இல்லாதவர்களைக் கூட கவர்ந்திழுத்து பார்க்கவைத்தது. ஆனால் அவரின் திடீர் மறைவால் அவருக்கு பதில் வேல ராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அதன் பிறகு சீரியலின் பார்வையாளர்கள் எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்தது.
மேலும் சீரியலில் அடுத்தடுத்து பல மாற்றங்கள் நடந்து திக்கு தெரியாமல் சென்றது. இந்நிலையில் இப்போது சீரியல் முடிக்கப்படவுள்ளது. கிளைமேக்ஸ் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சீரியல் நிறுத்தப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஒன்று மாரிமுத்து நடித்த கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்தாலும் அவரை மக்கள் ஆதி குணசேகரனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே போல சீரியலின் கதைப்போக்கை இப்படி மாற்று அப்படி மாற்று என சன் டி வி தரப்பில் ஏகப்பட்ட தொல்லை கொடுக்கப்பட்டதால்தான் ‘இத்தோடு முடித்துக் கொள்கிறேன்’ என திருச்செல்வம் கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.