மூன்றாவது முறையாக அஜித் ஹெச் வினோத் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் ஆமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
ரிலிஸுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் இப்போதுதான் படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளை தொடங்கியுள்ளனர். இதையடுத்து முதல் சிங்கிள் பாடலான சில்லா சில்லா பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, அனிருத் பாட, வைசாக் வரிகளை எழுதியுள்ளார்.

நேற்று மாலை வெளியான இந்த பாடல் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த முறை வலிமை படத்தில் வேற லெவல் பாடலில் அஜித்தின் நடனம் கேலி செய்யப்பட்ட நிலையில் இப்போது இந்த பாடலில் டீசண்டான மற்றும் ஸ்டைலிஷான அசைவுகளை அஜித் வெளிப்படுத்தியுள்ளார் என்று கருத்துகள் எழுந்துள்ளன.
