Saturday, August 22, 2026
Home > Cinema > மகள் இயக்கத்தில் நடிக்க முதலில் தயங்கிய ரஜினிகாந்த்… ஆனால்?

மகள் இயக்கத்தில் நடிக்க முதலில் தயங்கிய ரஜினிகாந்த்… ஆனால்?

இயக்குனரும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

வரிசையாக ரஜினி படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல ரஜினியின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த இரண்டு படங்களையும்  லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியும், இன்னொரு படத்தை ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும்  இயக்க உள்ளார்களாம்.

ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக இல்லாமல் ஒரு கௌரவ வேடத்தில் மட்டும்தான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் இந்த படத்தில் நடிக்க தயங்கியதாகவும், ஆனால் ஐஸ்வர்யா, அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.