தமிழ் சினிமாவில் வடிவேலு என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் உச்சம்தான். படத்தின் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி கல்லா கட்டினார்.
அப்படி நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த வடிவேலு 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். அதனால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை.
இதையடுத்து 2018 ஆம் ஆண்டு இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இயக்குனர் சிம்புதேவன் தரப்புக்கும் வடிவேலு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கிடப்பில் போடப்பட்டது.
பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் வடிவேலு அந்த படத்தில் மீண்டும் நடிக்க மறுத்தார். இதையடுத்து இப்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 மற்றும் மாமன்னன் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார். அதில் மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
ஆனாலும் அவரின் நகைச்சுவை பாணி தற்போது வொர்க் அவுட் ஆவதில்லை. வடிவேலு மார்க்கெட் போனதும் அவரை சுற்றியிருந்த அவரையே நம்பியிருந்த துணை நடிகர்களுக்கும் வேலையில்லாமல் போனது. அப்படி வடிவேலு காமெடிக் காட்சிகளில் நடித்த பிரியங்கா, இப்போது சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.
அவர் வடிவேலுவோடு நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் “வடிவேலு சாரோடு நடிக்க வேண்டுமென்றால் அவர் நடிப்பதைப் பார்த்து நாம் சிரிக்காமல் இருக்க வேண்டும். ஆனால் அதுதான் கஷ்டம். அவர் எது செய்தாலும் சிரிப்பு வந்துவிடும். இதனால் சில டேக்குகளை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டி வரும். ஆனால் நான் எப்படியோ கஷ்டப்பட்டு சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்வேன். இது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார்.
