நடிகர் விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (சுருக்கமாக The GOAT) படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட ஷூட்டிங் சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க போவதில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. பல அரசியல் கட்சி தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான வீர விக்னேஸ்வரன் என்பவர் கொடுத்துள்ள நேர்காணல் இப்போது வைரலாகி வருகிறது.
அவரது பேட்டியில் ” தளபதி விஜய்யின் அரசியல் நோக்கம் என்பது, மதவாதம் மற்றும் ஊழலை எதிர்ப்பது தான். இதைத்தான் கட்சியின் மீட்டிங்கில் தளபதி எங்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொன்னார். அம்பேத்கர், பெரியார், காமராஜர் பெரும் அரசியல் தலைவர்களின் கொள்கைகளை பின்பற்றிதான் தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடாமல் இருப்பதற்கு காரணம், கட்சியின் நோக்கம் தமிழகத்தை மையப்படுத்திதான் உள்ளது என்பதுதான் காரணம். 50 வருட திராவிட கட்சிகளுக்கு எதிரான எழுச்சிதான் எங்கள் கட்சி. ஆந்திராவில் என் டி ஆர் கட்சி ஆரம்பித்து எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயெ காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். அதே போல 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் விஜய்யை மையப்படுத்திதான் இருக்கப் போகிறது.” என தைரியமாக பேசியுள்ளார் வீர விக்னேஷ்வரன்.
