Thursday, May 21, 2026
Home > Cinema > பஸ்ஸில் செல்லும்போது டிஷர்ட்டில் நுழைந்த கை… ஆண்ட்ரியா பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

பஸ்ஸில் செல்லும்போது டிஷர்ட்டில் நுழைந்த கை… ஆண்ட்ரியா பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

ஆண்ட்ரியா நடித்துள்ள அனல் மேலே பனித்துளி எனும் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் அரிதானவர் ஆண்ட்ரியா. நடிப்பு தவிர, பாடல் மற்றும் இசை என பல களங்களில் செயல்பட்டு வருகிறார். பல படங்களில் சொல்லிக்கொள்ளும் படியான வேடங்களில் நடித்த ஆண்ட்ரியா தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார் . தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா. தொடர்ந்து 15 ஆண்டுகளாக நடித்து வரும் ஆண்ட்ரியா தற்போது முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிசாசு 2 மற்றும் அனல் மேலே பனித்துளி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில் அனல் மேலே பனித்துளி திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாகிறது. இந்த படத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. குறிப்பாக டிரைலரில் இடம்பெற்றிருந்த “மானம் என்பது என்னுடைய உடலிலோ நான் அணியும் ஆடையிலோ இல்லை, நான் வாழும் வாழ்க்கையில்தான் இருக்கிறது” என்ற வசனம் கவனம் ஈர்த்தது.

இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் சிறுவயதில் தான் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல் பற்றிய சம்பவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் “நாங்கள் சிறுவயதில் குடும்பத்தோடு வேளாங்கண்ணிக்கு சென்றோம். அப்போது என் மீது ஒரு கைபட்டது. அது என் அப்பாவின் கை என நினைத்து நான் அமைதியாக இருந்தேன். ஆனால் கை, என்னுடைய டிஷர்ட்டினுள் நுழைந்தது. அப்போதுதான் நான்  விபரீதத்தை உணர்ந்து, விலகி சென்று வேறு இடத்தில் அமர்ந்தேன். அதை நான் என் பெற்றோரிடம் சொல்லவில்லை. ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்களை நாம் வெளியே பகிர்ந்துகொள்ள கூடாது என்றுதான் நம் சமூகம் நம்மை பழக்கப்படுத்தி வைத்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.