நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்துக்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இவர் இயக்குனர் அகத்தியனின் மருமகன். இந்த படத்தைப் பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தனக்கும் ஏதாவது ஒரு கதை தயார் செய்யுங்கள்’ எனக் கூறியிருந்தார். இதனால் அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினி இவர் இயக்கும் படத்தில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென்று ரஜினி நெல்சன் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. ஜெயிலர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. படத்தில் ரஜினியோடு ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் தற்பொது நடிகை மிர்னா மேனன் இணைந்துள்ளார். இவர் சில வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஜெயிலர் திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
