Saturday, August 22, 2026
Home > Cinema > உங்களுக்கு முந்தி நாங்க வருவோம்… ரிலீஸ் தேதியை மாற்றும் வாரிசு படக்குழு!

உங்களுக்கு முந்தி நாங்க வருவோம்… ரிலீஸ் தேதியை மாற்றும் வாரிசு படக்குழு!

வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில ஆக்‌ஷன் காட்சிகளும் பாடல் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட உள்ளன. அதற்கான இறுதிக் கட்ட ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் முதலில் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இடையில் துணிவு திரைப்படமும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது வாரிசு திரைப்படம் துணிவு படத்துக்கு முன்பாக ஜனவரி 11 ஆம் தேதியே ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.