Wednesday, May 25, 2022
Home > பொழுதுபோக்கு > தேச பற்று..! இந்திய கலாச்சாரம்…! ஹிந்துத்துவம்..! ஆர்.ஆர்.ஆர். திரை விமர்சனம்

தேச பற்று..! இந்திய கலாச்சாரம்…! ஹிந்துத்துவம்..! ஆர்.ஆர்.ஆர். திரை விமர்சனம்

26-3-22/9.37AM

சென்னை : எஸ்.எஸ்.ராஜமௌலியின் படைப்பான ஆர்.ஆர்.ஆர். நேற்றும் மார்ச் 25 உலகெங்கும் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை 550கோடி பொருட்செலவில் தயாரித்திருப்பது டி.வி.வி.தனய்யா. படத்தில் இசையமைத்திருப்பது எம்.எம்.கீரவாணி. படத்தின் கதை எழுதியிருப்பது கே.வி.விஜயேந்திர பிரசாத். IMDP ரேட்டிங் 9.2. இந்திய அளவில் மிக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் இது என்றால் அது மிகையாகாது.

சுதந்திரபோராட்ட கால கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடித்த அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக அளித்திருக்கிறார்கள். ராம் சரணின் அறிமுக காட்சியில் லட்சம் பேரை அடித்து ஓடவிடுவது போன்று ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார் இயக்குனர். ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சியிலேயே புலி பிடிப்பதுபோல நமக்கு கிலியை தந்திருக்கிறார் ராஜமௌலி.

படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் பாகுபலியின் பிரமாண்டத்தை மிஞ்சி நிற்கிறது. படம்நெடுகிலும் ராம்சரண் பூணுல் அணிந்து வருவது படத்தின் ப்ளஸ். மேலும் ஜூனியர் என்.டி.ஆருக்கு உதவுவதாக அமைந்திருக்கும் இஸ்லாமிய குடும்பம் இன்னொரு பிளஸ். ராம்சரணை துரோகி என நினைக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு க்ளைமேக்சில் உண்மை தெரியவரும்போது அவரது முகபாவமும் நடிப்பும் வேறுபரிமாணத்தை காட்டுகிறது.

அதிலும் ராமனை தேடி சீதா தேவி செல்லக்கூடாது ராமன் தான் சீதாவை தேடிவரவேண்டும் என பேசும் வசனம் கைதட்டல் ரகம். சிறையில் சிக்கியிருக்கும் ராமை மீட்க ஆஞ்சநேயர் போல என்.டி.ஆர் செல்வது சீதா தேவி கொடுத்த லாக்கெட்டை ராமிடம் கொடுப்பது என ராமாயணத்தை நினைவு கூர்ந்திருக்கிறார் ராஜமௌலி. மேலும் கடைசி 20 நிமிடங்கள் ஸ்ரீராமராகவே மாறியிருக்கிறார் ராம்சரண்.

அதிலும் அந்த பின்னணி பாடல் நம்மை ஜெய் ஸ்ரீராம் என முணுமுணுக்க வைக்கிறது.

ஸ்லோகங்கள் சொல்லி பிரிட்டிஷ் கவர்னரை ஆக்ரோஷமாக சம்பவம் செய்வது நம்மை மயிர்கூச்செரிய வைக்கிறது. படம்நெடுகிலும் சிகப்பு கொடி பறக்கிறது. இந்துத்வத்தை அழகாக எடுத்துரைக்கிறார் இயக்குனர். ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆரை தாக்கும் காட்சியில் ஜூனியர் பாடும் விடுதலைப்பாடல் நம்மை மெய்மறக்க செய்கிறது. தேசப்பற்றை அழகான வரிகளில் நம்மில் விதைக்கிறார் கவிஞர். அஜய் தேவ்கன் விடுதலைப்போராட்ட வீரர் சுக்வீர் சிங்கை நினைவுபடுத்துகிறார்.

தெலுங்கு படங்கள் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்திருப்பதை இந்த திரைப்படத்தின் மூலம் உறுதிப்படுத்தமுடிகிறது, பொய்யான கதையை உண்மையென கூறி ஆஸ்கார் யூ ட்யூப்பில் பணம்செலுத்தி விளம்பரம் செய்த சில படங்கள் போல இல்லாமல் கற்பனைக்கதை என உண்மையை கூறி உண்மையை ஆங்காங்கே விதைத்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி.

துளி ஆபாசமோ ஒடுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம் என வலிந்து திணிக்கப்பட்ட வசனங்களோ அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிரான வசனங்களோ இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் கண்டு குதூகலிக்கலாம்.

…..உங்கள் பீமா

Leave a Reply

Your email address will not be published.

விளம்பரம்

This will close in 20 seconds

error: Content is Protected! © The Madras Telegram