Monday, April 20, 2026
Home > Cinema > வாரிசு படத்தில் விஜய்யுடன் நடிக்கிறேனா?… சீனியர் நடிகையின் பதில் இதுதான்!

வாரிசு படத்தில் விஜய்யுடன் நடிக்கிறேனா?… சீனியர் நடிகையின் பதில் இதுதான்!

நடிகை குஷ்பு சமீபத்தில் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர அது வைரல் ஆனது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில ஆக்‌ஷன் காட்சிகளும் பாடல் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட உள்ளன. அதற்கான இறுதிக் கட்ட ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை மூத்த நடிகையான குஷ்பு பகிர்ந்திருந்தார். இதனால் அவரும் வாரிசு படத்தில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதுகுறித்து இப்போது விளக்கம் அளித்துள்ள குஷ்பு “நான் வாரிசு படத்தில் நடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

குஷ்பு ஏற்கனவே விஜய்யோடு மின்சார கண்ணா திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் வில்லு படத்தில் ஒரு பாடலுக்கும் அவர் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.