புதுதில்லி : இந்திய பாதுகாப்பு அமைச்சத்தின் கீழ் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் அமைப்பு DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை 1958ல் உருவாக்கப்பட்டாலும் 1979களில் விஞ்ஞானிகளின் சேவையாக உருவாக்கப்பட்டது. இந்த DRDO நிறுவனத்தில் 5000 விஞ்ஞானிகள் உட்பட 25000 இதர பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த DRDO இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் விமானங்கள் என பல தயாரிப்புகளில் ஈடுபட்டாலும் மக்களின் சேவைக்கும் பல விஷயங்களை ஆய்வு நடத்தி அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் பேட்டரியால் இயங்கும் எலெக்ட்ரிக் பைக்குகள் ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பிடித்து மக்களுக்கு கிலி ஏற்படுத்தி வந்தது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஒரே வாரத்தில் 18க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடித்தன. இதுகுறித்த தெளிவான விளக்கம் எதுவும் தயாரிப்பு நிறுவனங்கள் கொடுக்கவில்லை. இதனால் DRDO அமைப்பு களத்தில் இறங்கியது.மத்திய நுகர்வோர் விவகாரத்துறையின் கீழ் வரும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டிசும் அனுப்பியிருந்தது.
பியூர் இவி, பூம் மோட்டார்ஸ், ஒகினாவா ஆட்டோ டேக், ஜிதேந்திரா, ஓலா எலக்ட்ரிக் உட்பட பல நிறுவனங்களின் தயாரிப்புகள் மீது DRDO பரிசோதனை மேற்கொண்டது. பலகட்ட ஆய்வுகளுக்குப்பின் தனது அறிக்கையை நேற்று அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின்படி ” பியூர் இவி, பூம் மோட்டார்ஸ், ஒகினாவா ஆட்டோ டேக், ஜிதேந்திரா, ஓலா எலக்ட்ரிக் போன்ற இருசக்கரவாகன உற்பத்தி நிறுவனங்கள்,
செலவைக்குறைக்கவேண்டி தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம். அதுவே தீவிபத்துகளுக்கு காரணமாக இருக்கலாம்” என DRDOவின் CFEES எனப்படும் வெடிபொருள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் உண்மை கண்டறியும் அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
எலெக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி நிறுவனங்களின் இந்த செயல்கள் மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.